பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் பங்கேற்பு செரீப் மகள் மரியம் நவாஸ் வரவேற்பு!
புதிய பிரதமராக நரேந்திரமோடி நாளை (26–ந் தேதி) பதவி ஏற்கிறார். அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் பங்கேற்கிறார்.
பதவி ஏற்பு விழாவில் நவாஸ் செரீப் பங்கேற்க பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பியது. தீவிரவாதிகளும், ராணுவமும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அவர் விழாவில் பங்கேற்க வேண்டும் என அவரது மகள் மரியம் நவாஸ் விருப்பம் தெரிவித்து இருந்தார்.
இந்தியாவின் மீது நல்லெண்ணம் கொண்ட அவர் நேசக்கரம் நீட்ட வேண்டும் என விரும்புகிறார். அது குறித்து டுவிட்டர் இணையதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:–
இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளும் கொரியா போன்று ஏன் பிரிவினை வாதத்தில் இருக்க வேண்டும். ஏன் எலியும், பூனையுமாக சண்டையிட்டு கொள்ள வேண்டும். மாறாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் போன்று சேர்ந்து வாழ முடியாதா?
அவ்வாறு நட்புறவுடன் சேர்ந்து வாழும் போது இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார வளர்ச்சி மேம்படும். இரு நாடுகளுக்கும் இடையேயான வேற்றுமைகள் குழி தோண்டி புதைக்கப்பட வேண்டும்.
அதன் மூலம் இருநாட்டு மக்களும் மேம்பாடு அடையும் நிலை ஏற்படும். இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக இணைந்து நோய்கள், வறுமை, கல்வி அறிவு இன்மை போன்றவற்றை எதிர்த்து போராடி வெற்றி பெற முடியாதா?
ஏன் முடியாது? அவற்றை நம்மால் வென்று காட்ட முடியும். இந்தியாவும், பாகிஸ்தானும் ஏன் பழையவைகளை பற்றி சிந்திக்க வேண்டும். விரோதம் மற்றும் பகைமையை குழி தோண்டி புதைத்து விட்டு புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டும்.
இருநாட்டு பிரதமர்களும் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து கருத்து தெரிவித்துள்ள மரியம், இதன் மூலம் இரு பிராந்தியத்திலும், அமைதி, ஸ்திரதன்மை மற்றும் பாதுகாப்பு ஏற்படும்.
மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற இருநாட்டு பிரதமர்களும் நம்பிக்கையுடன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். நேற்றைய எதிரிகள் நண்பர்களாக மாற வேண்டும். தற்போது அமைதியே எனது ‘ஹீரோ’ என்றும் தெரிவித்துள்ளார்.








0 comments:
Post a Comment