வி.சி.கணேசன் “சிவாஜி கணேசன்” ஆக மாறிய கதை
அய்யன் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்திட்ட அருமையான படமான "ராமன் எத்தனை ராமனடி" நாமெல்லாம் ரசித்து மகிழ்ந்தது. "சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்” நாடகத்தைப் பார்க்க முடியாத ஏக்கம் ரசிகர்களாகிய நம்மில் பலருக்கு இருந்திருக்கும். அண்ணா எழுதிய அந்த நாடகத்தை படிக்க வேண்டும் என்றஆசை இன்னும் என்னுள் இருக்கிறது. அதற்கு இப்படம்
நம் குறையை தீர்த்து வைத்தது.
ஒரு காட்சியில் நம்மய்யன் மராத்திய சிவாஜியாக வந்து வீர வசனம் பேசுவார். அவரின் வசன உச்சரிப்பின் ஏற்ற தாழ்வுகள். சிம்மம் போன்ற கர்ஜனை. அவர் கைககளை ஆட்டிப் பேசும் தோரனை அவரின் வித்தியாச வித்தியாசமான நடைகள் நம்மை எங்கோ உச்சத்தில் கொண்டு நிறுத்திவிடும். ஆச்சரியப் படவைக்கும். இதெல்லாம் எந்த நடிகரால் செய்ய முடியும்?
சரி, இந்நாடகம் எதற்காக அண்ணாவால் எழுதப்பட்டது என்ற வினாவிற்கு பதிலறிய வேண்டுமல்லவா? ஒரு காலத்தில் மேல் சாதி மக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கு
வடிகால் தேடும் முயற்ச்சியால் பகுத்தறிவு பகலவனால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கமான திராவிடர் கட்சிக்கு பிரட்சார நாடகங்கள் தேவைபட்டது. அதற்காகத்தான் இந்நாடகம் எழுதப்பட்டது. அதற்காகத்தான் சத்திரபதி சிவாஜியின் பாத்திரத்தை அண்ணா தேர்வு செய்தார்.
சிவாஜி மன்னனாக முடி சூட்டிக் கொள்ள நினைத்தபோது அவர் சூத்திரன் என்று சில எதிர்ப்புகள் கிளம்பியது. அவரை காகபட்டர் என்ற உயர் சாதி குரு எப்படி எல்லாம் சிவாஜியை பட்டம் ஏற்க முடியாத அளவிற்கு அலகழித்தார் என்பதே இக்கதையின் நோக்கம். காகபட்டருக்கு ஒவ்வொரு செயலிலும் உயர் சாதிதத்தான் உயர்ந்தது என காட்டுவதே அவரின் வாடிக்கை.
இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால் காகபட்டர் வேடத்தில் நடித்தவர் யார் தெரியுமா?
அறிஞர் அண்ணா.
சிவாஜியும் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக சில “பகுத்தறிவாளர்களின்” அதிருப்தியை அலட்சியப்படுத்தி பட்டருக்கு அடங்கிபோனார் என்று இந்நாடகத்தின் கதை எடுத்துரைக்கிறது.
இந்நாடகத்தின் இன்னொரு பெயர் சந்திரமோகன். சந்திரமோகன் ஒரு பகுத்தறிவாளன், அவன் சிவாஜியின் விசுவாசமான தோழன். கதைபடி சந்திரமோகன்தான் நாடகத்தின் கதாநாயகன்.
1945-இல் எழுதி இருக்கிறார்.
காணொளியை பார்த்து வசனத்தை கேட்டு எழுதியது:
"அரசே தங்களின் முடிசூட்டு விழாவிற்கு ஒரு கறை வீழ்ந்திருக்கிறது."
"ஏன் மகுடம் தயாராகவில்லையா?
"இல்லை"
"பிறகு?.........காரணம்?"
"தாங்கள் தாழ்ந்த ஜாதியாம்..... அரசியலே அறியமாட்டீர்களாம். அதனால்
முடிசூட்டிக்கொள்ள முடியாது."
"தாழ்ந்த ஜாதி! அரசியலே அறியாதவன்! ஹூம்! யார்? தானும் நாடும் ஒன்றெனக் கண்டு தன்னையே தந்த மன்னன் சிவாஜி தாழ்ந்த ஜாதியா? மன்னர் குலத்தில் பிறக்காதவன், பரம்பரை உரிமை இல்லாதவன், மானம் காக்கும் குடியானவன், மகுடம் தாங்க முடியாதா? தார்தாரியார் தந்த புரவியில் அமர்ந்து ஆர்த்தெழுந்த சிவாஜியைக் கண்டு நாட்டுக்குடைய நல்லவனென்றும் போர்ப்பாட்டு முழக்கும் மன்னவனென்றும், ஆரத்தியெடுத்த மக்களேங்கே? ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே? உறையிருந்த வாளெடுத்து ஒவ்வொரு முறையும், மராட்டியம் என்றே முழங்கி இரையெடுக்கத் துடித்த வேங்கை போல் எங்கே பகைவர் எங்கே பகைவர் என்று தேடி கறை படியாத என் அன்னை நாட்டை காப்பேன்! காப்பேன்! என சூளுரைத்து இந்த நாடு என் சொந்த நாடு. இந்த மக்கள் என் சொந்த மக்கள், உயிரினும் இனிய என் மக்களுக்காக ஓடினேன். பகைவரைத் தேடினேன். வாள் கொண்டு சாடினேன். வெற்றியை நாடினேன். பகைத் தேடி வெல்ல மட்டும் உரிமை உண்டாம். முடி சூட்டிக் கொள்ள மட்டும் தடை செய்வாராம்.
அரசியலை நான் அறியாதவனா? ஹ… அரசு வித்தைகள் புரியாதவனா? ஹ… ஹ… எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்புரை கேட்டு நொந்து போக நான் நோயாளி அல்ல! என்னை விட்டொருவன் இந்த தரணியாளும் தகுதியை அடைந்துவிட்டானா? ஏமாந்த மக்களிடம் ஏற்றம் கொண்டு நாமேதான் நாடொன்று தலைதூக்கித் திரியும் அந்த புல்லுருவிகள் எனது முடியைத் தடுக்கிறார்களா அல்லது தங்கள் முடிவைத் தெடுகிறார்களா?
அதோ போர்ணா! கொட்டிய முரசும், கூவிய படையும் எட்டிய பரியும் எழுந்து நடந்து கோட்டை மதிலை சுற்றி வளைத்து வேட்டையாடி வெற்றி படைத்து, வாழ்க சிவாஜி வாழ்கவென்று வாழ்த்துரை கூறி வழங்கியபோது, ஓஹோ என்று எதிரொலித்ததே இந்தக் கோட்டைத்தான்.
அதோ புரந்தர்! போகாதீர்கள்! படை பலம் அதிகம்! கோட்டை முன்னால் தடைகளும் அதிகம். ஒற்றன் தடுத்தான் ஒருநாள் என்னை! இடுப்பொடிந்தோரெல்லாம் இல்லத்திருங்கள்; கோழைகள் விலக வீரர்கள் வரட்டும். ஏறு முன்னேறு என எக்காளமிட்டு பகைவர் தலைகளை கனியென கொய்து முரசும் ஒலித்து நான் முழக்கிய கோட்டை இதுதான். புரந்தர்! இதுதான்!
அதோ ராஜகிரி! ஆடுவார் ஆட்டமும், பாடுவார் பாட்டுமாய் அந்நியர் களித்திருக்க யாரது மண்ணிலே யாரது நாடகம் பார்ப்போம் என்று நான் படையெடுக்க, என்னடா முடியும் உன்னால் என்று எதிரிகள் கொக்கரிக்க, இதுவும் முடியும்… இன்னமும் முடியும் என்று நான் வாளெடுக்க பெட்டையர் கூட்டம் உள்ளம் கலங்க மராட்டிய மண்டல மக்கள் களிக்க நான் கட்டுக்காத்த கோட்டை இதுதான்.
அதோ கல்யாண்! கண்ணீர்விட்டு கதறிய பெண்கள், ஐயோ என்று அலறிய குழந்தைகள், முடிவறியாது தவித்த முதியோர் கொடியோர் கையில் சிக்கிக் கிடந்தனர்! பகைவர் பொடிப் பொடியாக போர்க்கலம் ஏந்தி மராட்டியக் கொடியை நான் ஏற்றிய கோட்டை இதுதான்.
என்னையா கேட்டார்கள்; நீ யாரென்று! எவன் இந்த மண்ணனுக்கு சொந்தக்காரனோ! எவனது நெற்றியில் எப்போதும் ரத்தத் திலகம் திகழ்ந்து கொண்டேயிருக்குமோ, அவனைப் பார்த்து வாழ வந்த வஞ்சகக் கூட்டம் கேலி பேசுகிறதாம்! தாழ்ந்த ஜாதி… அரசியலை அறியாதவன் என்று! இதுதான் முடிவென்றால்… இல்லையெனக்கு முடியென்றால், நான் காத்த கோட்டைகள் வேண்டுமோ? கொத்தளங்கள் வேண்டுமோ? வெற்றி பாட்டு வேண்டுமோ? பரவசம் வேண்டுமோ? கரையான் புற்றென்ன கருநாகங்களுக்கு சொந்தமோ? அடிபடட்டும் கோட்டைகள்! இடியட்டும் மதில் சுவர்கள்!
அன்னை பவானி! அன்னை பவானி! உன் கண்கள் சிவகட்டும்! மின்னல் ஒளிரட்டும்! இடி இடிக்கட்டும்! சூறை காற்று மோதட்டும்! கொடு மழை பொழியட்டும்! கொடியவர்கள் அழியட்டும்! கொடியவர்கள் அழியட்டும்!"
அன்புடன்....
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
வி.சி.கணேசன் “சிவாஜி கணேசன்” ஆக மாறிய கதை
RV
திராவிட கழகத்தில் இருந்து தி.மு.கழகம் பிரியாத காலக்கட்டம் அது (1946). சென்னையில் ஏழாவது சுய மரியாதை மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், பெரியாரும், அண்ணாவும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.
மாநாட்டில் நடிப்பதற்காக “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற பெயரில் ஒரு நாடகத்தை அண்ணா எழுதியிருந்தார்.
இந்த நாடகத்தின் கதைச்சுருக்கம் வருமாறு:- சிவாஜி பெரிய மாவீரன். சாதாரணக் குடிமகனாக இருந்து பெரிய மன்னனானவன். அந்நியர் ஆட்சியை எதிர்த்தவன். மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியபோதிலும், அவன் மன்னனாக முடி சூட்டிக் கொள்ள பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது. காரணம், அவன் கீழ் சாதி! இதனால், காசியில் இருந்து காகப்பட்டர் என்ற பெரிய மதத் தலைவரை அழைத்து வந்து, சிவாஜியை சத்திரியனாக மாற்றுகிறார்கள். அதன் பிறகு தான் அவர் சிம்மாசனம் ஏற, இந்துக்கள் சம்மதிக்கிறார்கள்.
இப்படி செல்லும் இந்த நாடகத்தில், சிவாஜியாக எம்.ஜி.ஆரும், காகப்பட்டர் வேடத்தில் அண்ணாவும், மற்றொரு முக்கிய வேடத்தில் டி.வி.நாராயணசாமியும் நடிப்பது என்று முடிவாகியது.
இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். காங்கிரஸ் அனுதாபியாகவும், பக்தராகவும் இருந்தார். என்ன காரணத்தினாலோ, எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில் நடிக்கவில்லை. நாடகத்துக்குப் பொறுப்பாளராக இருந்த நடிகர் டி.வி.நாராயணசாமி அண்ணாவை சந்தித்து, எம்.ஜி.ஆர். தன்னால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.
“திராவிட நாடு” அலுவலகத்தில் தங்கியிருந்த வி.சி. கணேசன் (இன்னும் சிவாஜி கணேசன் ஆகவில்லை), இதற்குள் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியிருந்தார். சிவாஜியின் நடிப்பாற்றல் பற்றி அண்ணாவும் நன்கு அறிந்திருந்தார்.
எனவே, சிவாஜியை அழைத்து, “கணேசா! என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா?” என்று கேட்டார்.
இதைக்கேட்டு சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி! தன் காதுகளையே நம்பமுடியவில்லை. “என்ன அண்ணா சொல்கிறீர்கள்? உங்கள் நாடகத்தில் நான் நடிப்பதா? அதுவும் சிவாஜி வேடத்தில்! என்னால் முடியுமா?” என்றார்.
“நீ முயற்சி செய்து பார், கணேசா! உன்னால் முடியும்” என்றார், அண்ணா.
மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை சிவாஜியிடம் கொடுத்து, “நான் வீட்டிற்குச் சென்று வருகிறேன். அதற்குள் இதை நீ படித்து வைத்திரு. எப்படிப் பேசுகிறாய் என்று பார்ப்போம்” என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
அவர் சிவாஜியிடம் வசனத்தை கொடுத்தபோது பகல் பதினோரு மணி இருக்கும். அண்ணா வீட்டிற்கு சென்று, மாலை ஆறு மணியளவில் திரும்பி, அலுவலகத்திற்கு வந்தார். “கணேசா! வசனத்தைப் படித்தாயா?” என்று கேட்டார்.
சிவாஜி அவரிடம், “அண்ணா! நீங்கள் இப்படி உட்காருங்கள்!” என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி, அதற்குத் தகுந்தாற்போல் நடித்துக் காண்பித்தார்.
அண்ணா சிவாஜியை கட்டித் தழுவி “கணேசா! நீ இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே! அரிய சாதனை” என்றார். அண்ணா எழுதிய 90 பக்க வசனத்தை குறுகிய காலத்தில் படித்து, நடித்துக் காட்டினார் என்றால் அதற்கு சிவாஜியிடம் இருந்த கலை ஆர்வமும், மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆற்றலும்தான் காரணம்.
திராவிட கழக மாநாட்டில், “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் சிவாஜியாக சிவாஜி கணேசனும், காகபட்டர் வேடத்தில் அண்ணாவும் நடித்தனர். 3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார்.
“நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா” என்று பாராட்டினார். அத்துடன், “யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே, அவன் யார்?” என்று கேட்டார்.
சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, “இந்தப் பையன்தான். பெயர் கணேசன்” என்று அறிமுகம் செய்து வைத்தனர். “சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!” என்று பெரியார் வாழ்த்தினார்.
பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை “வி.சி.கணேசன்” என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் “சிவாஜி கணேசன்” ஆனார்.
“என்னுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தது சிவாஜி என்ற பெயர்! ஐயாவையும், அண்ணாவையும், அந்த மாநாட்டையும் நான் என்றுமே மறப்பதில்லை. அதற்குப் பிறகுதான் சாதாரண கணேசன், சிவாஜி கணேசன் ஆனேன். `சிவாஜி’ என்ற பெயர், தந்தை பெரியார் அவர்கள் எனக்குப் போட்ட பிச்சை” என்று சிவாஜி கணேசன் தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.
தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம்
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
அண்ணாதுரையின் “சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்” ~RV
"ராமன் எத்தனை ராமனடி வீடியோவில் முதலில் சிவாஜியிடம் வந்து அவர் முடி சூட்டிக் கொள்ள எதிர்ப்பு இருப்பதைத் தெரிவிக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பவர் ஒரு முக்கியமானவர். அவர் பெயர் எஸ்.ஏ.கண்ணன். அவரும் சிவாஜி கணேசனும் பத்து வயதுச் சிறுவர்களாக இருந்தபோது ஒரே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்கத் தொடங்கியவர்கள். பராசக்தி படத்திலும் கோர்ட் சீனில் கண்ணன் ஒரு வக்கீலாகத் தோன்றி “உனக்கேன் அவ்வளவு அக்கறை ?” என்று கேட்பார். சிவாஜி தனக்கென்று சொந்தமாக ஒரு நாடக மன்றம் தொடங்கியபோது அதன் இயக்குநராகவும் நிர்வாகியாகவும் இருந்தவர் கண்ணன். வீரபாண்டிய கட்டபொம்மன், வியட்நாம் வீடு, தங்கப் பதக்கம் ஆகியவற்றையெல்லாம் நாடகங்களாக இயக்கியவர் அவர்தான். அண்மையில் காலமானார்.
காகபட்டர் நிஜ மனிதர். காசியைச் சேர்ந்தவர். சிவாஜி சூத்திரன், ஷத்திரியன் அல்ல என்பதால் முடி சூட்டிக் கொள்ளும் தகுதி இல்லை என்று சித்பவன் பிராமணர்கள் சொன்னதும் சிவாஜியின் தூதர்கள் காசிக்குச் சென்று அங்கே செல்வாக்குள்ள பண்டிதரான காகபட்டரிடம் உதவி கேட்கிறர்கள். அவர் ஒரு ஹோமம் நடத்தி சிவாஜியை ஷத்திரியனாக்கி முடி சூட்ட வழி இருப்பதாக சொல்லி அதன்படியே மராட்டியத்துக்கு வந்து முடிசூட்டி வைக்கிறார். இது சரித்திரத்தில் நடந்தது. இது பற்றி டாக்டர் அம்பேத்கர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். காகபட்டரை முற்போக்கான உயர்சாதியினருக்காக வியாக்யானம் செய்யும் சரித்திர ஆசிரியர்களும் உண்டு. அம்பேத்கர் காகபட்டரை முற்போக்காளராக பார்க்கவில்லை. சித்பவன் உயர் சாதியினரின் பிடிவாதம் அவர்களுக்கே எதிரானது ஆகிவிடும். சிவாஜிக்கு பெரும் மக்கள் செல்வாக்கு இருப்பதால் அவன் எப்படியும் மன்னனாகிவிடுவான். அதைத் தடுத்த உயர்சாதி அரசு ஆதரவை இழப்பார்கள். அப்படி ஆகிவிடக் கூடாது என்பதற்காக, தொடர்ந்து அரசில் உயர்சாதி செல்வாக்கை தக்க வைப்பதற்காக காகபட்டர் சூழ்ச்சி செய்து சிவாஜிக்கு முடிசூட்ட முன்வந்தார் என்பதே அம்பேத்கரின் கருத்து. அண்ணா அதைப் பின்பற்றியே தன் நாடகத்தை எழுதினார்."
⭐ நீண்ட கட்டுரையில் தேவையானவற்றை மட்டுமே பதிவாக்கியுள்ளேன்.
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO







0 comments:
Post a Comment